சேலம்: சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வரும் இருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த அருண் (30) மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவசங்கர் (31) ஆகியோர் தன்னை காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பாலியல் இச்சைக்கு உடன்பட வேண்டும் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் வார்டன் அருண் மற்றும் சிவசங்கரை இன்று(ஜன.12) போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் இருந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புகாரை அளித்த பெண், கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது ஓமலூர் பகுதியில் தனியார் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: தஞ்சாவூர் சோழபுரம் கொலை வழக்கில் 3 பேர் கைது!