குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது எனவும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர் சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தொழில் துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக் கோரியும், வேலையாட்களின் வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல், சேலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் தலைமையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களைக் காவல் துறையினர் சமரசம் செய்தனர்.
இதையும் படிங்க: எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் - கமல் ஹாசன்