சேலம் கந்தம்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு, வாகன புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் கண்காணிப்பாளர் சந்திரமெளலி தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்தில் பணியாற்றி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர்களான ராஜேஷ் கண்ணா, செந்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகள், லஞ்சம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளர் சரவணன், இடைத் தரகர்களான சுந்தரம், ஜெயச்சந்திரன், தனசேகர் ஆகியோர் பல லட்சம் ரூபாய் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (அக்.28) மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (அக்.29) அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 5ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, ஊழியர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிடி ஸ்கேன் மையங்களுக்கு சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு!