சேலம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் இணையும் விழா சேலத்தில் நடைபெற்றது. விழா முடிந்த பிறகு, வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறிதாவது, “தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் பூர்வக்குடி தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க சட்டம் நிறைவேற்றிட வேண்டும், தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் சட்டம் வேண்டும்
தமிழ்நாட்டில் பாலியல் வன்புணர்வுகளுக்கு மிக கடும் சட்டம் பலப்படுத்த வேண்டும். பிஞ்சு குழந்தைகளை கண்காணிப்பதற்கும், குழந்தைகளின் பெற்றோருக்கு வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் நபர்கள் மீது உச்சபட்ச தண்டனை கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து கடுமையாக்க வேண்டும்.
நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பனுக்கு மணிமண்டபம் வேண்டும்
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு உரிய இடங்களை திமுக ஒதுக்கீடு செய்யும். கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதேபோல் தொடர்ந்து செயல்பட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதுமான நிதியை உடனே ஒதுக்கி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு முன்வந்து வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்டினால் வரவேற்போம். இல்லாவிட்டால் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Save Life: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.5000 பரிசு