அமமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெங்கடாசலத்தின் மூத்த மகன் சந்தோஷ் குமார் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இன்று சேலத்திற்கு வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெங்கடாசலத்தின் இல்லத்தில் உயிரிழந்த சந்தோஷ் குமாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தந்தை பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல, அவர் ஒரு இயக்கம், எனவே அவர் குறித்து அவதூறாக ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது. தமிழருவி மணியன் போன்றோரிடம் விவரம் கேட்டறிந்து ரஜினி பேசியிருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும். நானோ சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.