சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகிலுள்ள அதிகாரப்பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார் (29). ரவுடியான இவர் மீது ஒரு கொலை வழக்கும் அடிதடி வழக்குகளும் உள்ளன. இவருக்கு மனோரஞ்சிதம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு ஒன்பது மணியளவில் சரத்குமார் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை ஆறு மணியளவில் சரத்குமார் அதிகாரப்பட்டியில் உள்ள ரயில்பாதை அருகே தொடைப்பகுதியில் காயத்துடன் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தார்.
பின்னர், ஆய்வாளர் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது சரத்குமாரின் உறவினர்கள், இது விபத்து அல்ல; யாரோ கொலை செய்து ரயில் பாதையில் வீசிச் சென்றுள்ளனர் எனப் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர், "சரத்குமார் ரயிலில் அடிபட்டுதான் இறந்துள்ளார். இது குறித்து ரயில் ஓட்டுநர் ஏத்தாப்பூர் ரயில் நிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில்-தான் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் சரத்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஓடும் ரயிலில் சிக்கி இறந்தாரா? எனப் பல்வேறு கோணங்களில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : தண்டவாளத்தில் கிடந்த உடல்; ரயிலை நிறுத்திய ஓட்டுநர்... சிக்கிய கொலையாளிகள்!