மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் அனல் மின் நிலையங்களுக்கும் நிலக்கரி கொண்டு வர ஓமலூர் முதல் மேட்டூர் அணை வரை உள்ள ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற 2011-2012ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இதன்படி, ஓமலூர் முதல் மேட்டூர் அணை வரை 29 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது மேச்சேரி ரோடு முதல் மேட்டூர் அணை வரை 17 கி.மீ. தொலைவு வரை இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது இருப்புப்பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட்டுள்ளது.
குட்டப்பட்டி, எம்.காளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, பிஎன் பட்டி, வீரக்கல் புதூர் ஆகிய ஆறு கிராமங்களை இந்த இருப்பு பாதை கடந்து செல்கிறது.
இந்நிலையில், நேற்று (செப். 28) பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மேற்பார்வையில் அதிவேக சிறப்பு ரயிலைக் கொண்டு அங்கு வெள்ளோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிவேக ரயிலுக்கு மேட்டூர் ரயில் நிலையத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ரயில் வெள்ளோட்டம் காரணமாக இருப்புப் பாதை கடந்து செல்லும் ஆறு கிராமங்களில், இருப்பு பாதை ஓரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டுமென ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து பேசிய ரயில்வே துறை அலுவலர்கள், ”ஓமலூர் சந்திப்பு முதல் மேச்சேரி சாலை வரை எஞ்சிய 12 கிலோமீட்டர் தொலைவு இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடையும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்!