சேலம்: தமிழக ஆசிரியர்கள் கூட்டணி முப்பெரும் விழா சேலத்தில் இன்று (செப்.24) நடைபெற்றது. இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று கூறும் தமிழக முதல்வர், மூன்று வருடங்கள் ஆகியும் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இன்றளவிலும் வாய் திறக்கவில்லை. சட்டமன்றத்தில் கூட இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.
7 லட்சம் ஆசிரியர்கள் தமிழகத்தில் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எமிஸ் (EMIS-Educational Management Information System) இணையதளம் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களை சித்தரவதை செய்கின்ற திட்டமாகவே உள்ளது. ஆசிரியர்கள் அன்றாட அந்த புள்ளி விபரத்தை சேகரிப்பதற்கே நேரம் சென்று விடுகிறது. இப்படியே புள்ளி விபரங்களை சேமித்துக் கொண்டிருந்தால், எப்போது பள்ளி மாணவர்களுக்கு பாடத்தை நடத்துவது?" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எண்ணும் எழுத்தும் திட்டத்தின் காரணமாக ஆசிரியர்கள் மீளா துயரத்தில் உள்ளனர். இந்த திட்டத்தின் காரணமாக ஒரு ஆசிரியர் உயிரிழந்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் எப்போதும் இந்த எமிஸ் திட்டத்தின் கீழ் புள்ளி விபரங்களை மட்டுமே சேகரித்துக் கொண்டிருந்தால், அரசுப் பள்ளிகளை விட்டு மாணவர்கள் தனியார் பள்ளிக்குத்தான் செல்வார்கள். அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் எதற்கு? பெண்களின் ஊக்க தொகையை வரவேற்கிறோம்.
பள்ளிகளில் மாணவ, மாணவிகள் படிக்காமல் இருக்கும் நிலையில் எல்லாவற்றையும் கொடுக்கும் திட்டங்கள் எதற்கு? தமிழகத்தில் 16 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அப்படியே நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் ஒட்டுமொத்த இதயத்துடிப்பாக நாங்கள் பேசுகிறோம். இந்த ஆட்சி ஆசிரியர்களை கைவிட்டுவிட்டது. ஆசிரியர்களால் வைக்கப்பட்ட எந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
அன்றாடம் ஆசிரியர்களை சித்திரவதை செய்கின்ற எமிஸ் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். நீங்கள் விடுவிக்கவில்லை என்றால், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி எமிஸ் இணையதளத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொள்வோம். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நாங்களே கைவிடுவோம்.
புத்தகத்தை வைத்து பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இது குறித்து இனியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், விரைவில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்குத் தடை; அதிகாரிகள் ஆய்வு!