சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் ஒரு மாதத்திற்கு முன் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடையில் இருந்து வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை சம்பவத்திற்கு முதல் நாளன்று வழக்கம் போல் சந்தோஷ் வீட்டுக்குச் செல்லும் முன் கதவைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 1 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று கொள்ளையர்கள் கடையின் மின் விளக்குகளை அகற்றி பூட்டை உடைத்து, வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் நகைக்கடையைத் திறக்க வந்த கடையின் உரிமையாளர் சந்தோஷ், கடையின் பூட்டு உடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போனதைக் கண்டு ஜலகண்டாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே சம்பவம் நடந்த கடைக்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்