நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்கும் வகையில் சேலத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும், வீடியோ பதிவுடன் கூடிய பறக்கும் படை அமைக்கப்பட்டு தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு திருச்சி பிரதான சாலையில், தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி ஆனந்த் யுவனேஷ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் இருந்த நடிகை நமீதா காரை சோதனை செய்ய ஒத்துழைக்க மறுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் வந்திருந்த நமீதாவின் கணவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரும் காரை சோதனையிட கூடாது என அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இது வழக்கமான சோதனை என்பதால் ஒத்துழைக்குமாறு பலமுறை கேட்டும் வாகனத்தை விட்டு நடிகை நமீதா இறங்க மறுத்து பிடிவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து, பெண் காவலர்கள்தான் தங்கள் வாகனத்தை சோதனையிட வேண்டும் எனக் கூறியதையடுத்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு நமீதாவின் வாகனத்தை சோதனை செய்தனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை நமீதாவுடன் வந்தவர்கள் மிரட்டும் தோணியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.