ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு ராணுவத்தினர் இடையே துப்பாக்கி சண்டை நேற்று முன்தினம்(ஜூன்.4) மாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் சேலம் மாவட்டம், எடப்பாடிக்குட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (40) குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த 1999ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ஹவில்தார் பதவியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி என்கிற மனைவியும், ரோகித் (12), சுபாஸ்ரீ (8) என இருகுழந்தைகளும் உள்ளனர். நாட்டின் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து மதியழகன் இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அவரது மனைவி தமிழரசிக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மதியழகனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மதியழகன் உடல் அவரது சொந்த கிராமமான சித்தூருக்கு இன்று எடுத்து வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களது ஊரை சேர்ந்த ராணுவ வீரர் எல்லையில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்திருந்த செய்தி சித்தூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.