சேலம்: சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி மற்றும் அஸ்தம்பட்டி பகுதிகளில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழ்நாட்டில் இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை 12 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 28 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 56 விழுக்காட்டினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எளிதாக தடுப்பூசி கிடைத்தபோது அதனைப்பயன்படுத்த அப்போதைய அரசு தவறிவிட்டது. ஒன்றிய அரசு தற்போது போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கும்.
இந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால், தடுப்பூசி குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் மூன்றாம் அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
கரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற வதந்தி பரவியுள்ளது. இருப்பினும், தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் புதிய வகை டெங்குவால் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய 3 பேர்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கோவை முதலிடம்