இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி 900 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவருகிறது.
இந்தப் பூங்காவில் கால்நடைப் பண்ணை, கால்நடை தொழில்நுட்பங்கள், திறன்வளர்ப்பு பயிற்சிகள், ஆராய்ச்சி, கால்நடை கல்லூரி ஆகியவை அடங்கிய 'கால்நடை அறிவியல் ஒருங்கிணைந்த அதிநவீன ஆராய்ச்சி மையம்' அமையவுள்ளது. இதற்காக ரூ. 82.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையாக 50 கோடி ரூபாயும் இரண்டாவது தவணையாக 32.13 கோடி ரூபாயும் வழங்கப்படும். கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல்கட்டமாக 2020 - 2021ஆம் ஆண்டு கல்வியாண்டில் 40 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். பின்னர் இதன் எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி!