தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பின்னிரவு 12.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி விமானத்தில் சேலம் சென்றார்.
முதலமைச்சரின் தாயாரின் உடல் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து, அம்மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டவும் தூத்துக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி, தனது தாயார் மறைவு குறித்து செய்தி அறிந்த பின்னர் சேலம் நோக்கி சென்றுள்ளார்.
இதனிடையே, இன்று (அக்.13) தூத்துக்குடி மற்றும் நாளை 14ஆம் தேதி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவிருந்த கரோனா ஆய்வுக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறைந்த தவசாயி அம்மையாரின் உடல் தகனம் இன்று காலை 9 மணியளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.