திருவள்ளூர் மாவட்டம், அல்லிமேடு பகுதியில் கடந்த மாதம் இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்ததால், அவர் கத்தியைப் பிடுங்கி அஜித்தை கொலை செய்ததுடன் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தற்காப்புக்காக மட்டுமே இக்கொலை நடந்ததால், அப்பெண்ணை வழக்கிலிருந்து சட்டப்படி விடுவித்து, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவிட்டார். விடுதலையான பெண், அவரது குடும்பத்தினருக்கு, கொலையான அஜித்தின் மனைவி உள்ளிட்டோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து, இழிவுபடுத்தும் வகையில் பேசிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்பி அரவிந்தனிடம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தார் உதவியுடன் வந்து அப்பெண் புகார் அளித்தார்.
புகாரில் தனக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட எஸ்பி அரவிந்தன், இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரண்!