தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சுமார் 1,080 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இப்பூங்காவிற்கு முதல்கட்டமாக 396 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், "வெளிநாடுகளில் உள்ள கால்நடை பூங்காக்களை ஆய்வு செய்த பின்னர், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்படவுள்ளது. 1,600 ஏக்கர் பரப்பளவில் என்னென்ன அமைப்பது என இறுதியாக முடிவுசெய்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதத்தில் பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுவார்.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.391 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு ரூ.82 கோடியும், நாட்டுக்கோழி உற்பத்தி மையத்திற்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டிலேயே கால்நடை கல்லூரி தொடங்கப்படும். தமிழ்நாடு மாணவர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு மாணவர்களும் இங்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வசதி செய்யப்படும். இத்திட்டத்தில் பசு மாட்டுப் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்கேற்ற தீவனம் வளர்க்கவும், நாட்டுக்கோழியை வளர்த்து விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள் தொழில் தொடங்க பயிற்சியும், தீவன உற்பத்தி அதிகரிக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.262 கோடி ரூபாய் மதிப்பில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தனி குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படும்" என்றனர். மேலும் ஒரு ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவு பெறும் எனவும் தெரிவித்தனர்.
ஆய்வில், கால்நடை பாதுகாப்புத் துறை இயக்குனர் ஞானசேகரன், கால்நடைத்துறை செயலர் கோபால், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு!