முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள்(93) இன்று (அக்.13) நள்ளிரவு சேலத்தில் காலமானார். அவரின் இறுதி சடங்குகள் முதலமைச்சரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது.
இன்று காலை 8.30 மணி அளவில் சிலுவம்பாளையத்தில் உள்ள இடுகாட்டில் தவுசாயம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது.
பின்னர் முதலமைச்சரின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்த அனைவரும் அங்கு வைக்கப்பட்டிருந்த அவர் தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் என திரளானோர் முதலமைச்சரின் இல்லத்திற்கு வந்து இருந்து அவரின் தாயார் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் இல்லத்திற்கு வந்தார். பின்னர் அவரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு ஓ . பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், காமராஜ், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்களும் தவுசாயம்மாள் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பேசி ஆறுதல் தெரிவித்து விட்டு சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திரையரங்கு திறக்கப்படுமா?