சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா ஆட்சி காலம் முதல் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்துசெய்து, தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை 116, 37 ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும்.
2019ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஆசிரியர் கூட்டணி கணேசன் கூறுகையில், "தமிழ்நாட்டில் அண்ணா காலத்திலிருந்து 50 ஆண்டு காலமாக வழங்கிவந்த ஊக்க ஊதிய உயர்வை ரத்துசெய்துள்ளது சரியில்லை.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இந்த அதிமுக ஆட்சியாளர்கள், அவர்கள் அறிவித்த அரசாணையை ரத்து செய்தது மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. எனவே எங்களின் கோரிக்கைக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்க வேண்டும். இல்லை என்றால் மாநில அளவிலான அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும்'' என்றார்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: ஓபிசி பிரிவுக்கு இட ஒதுக்கீடு கிடையாது!