சேலம்: தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட எட்டு துறைகள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இதையடுத்து பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த எட்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டின் முன்பு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று (ஜன. 08) காலை முதலே மனு அளிக்க காத்திருந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் சென்னை புறப்பட்டதால் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை அளிக்க அனுமதிக்கவில்லை என்று கூறி திடீரென சாலையில், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் சிலர் முதலமைச்சர் புறப்படுவதற்கு முன்பாக கோரிக்கை மனுவை அவரை சந்தித்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததால் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர்களை காவல் துறையினர் சமாதானப்படுத்தி ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.