சேலம்: அரசு மதுபானக் கூடம் (டாஸ்மாக் பார்) நடத்த அனுமதி பெற்று தருவதாக கூறி கோடிக் கணக்கிலான ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் முறைகேடாக இயங்கும் டாஸ்மாக் பார்களை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் 17 இடங்களில் முறைகேடாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்கள் அதிரடியாக மூடப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது போன்ற டாஸ்மாக் பார் நடத்த முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டு பார் நடத்திக்கொள்ள அமைச்சர் தலைமையிலான குழுவினர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்காக 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஒவ்வொரு டாஸ்மாக் பார்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. மூடப்பட்ட 17 டாஸ்மாக் பார்களிலும் இதே போன்ற நிலைமை தான் இருந்துள்ளது.
ஒவ்வொருவரிடமும் 8 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கில் வசூல் செய்த பின்னரும் டாஸ்மாக் பாருக்கான அனுமதி வழங்கப்படவில்லை. இன்றைக்கு வரும் நாளை வரும் என டாஸ்மாக் பாரை முறைகேடாக நடத்தி வந்த நிலையில், அரசின் நடவடிக்கை காரணமாக சேலத்தில் உள்ள 17 டாஸ்மாக் பார்களும் அதிரடியாக மூடப்பட்டன.
அரசு டாஸ்மாக் பார் நடத்த அனுமதி பெறுவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தையும் திரும்ப யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரை தெரிந்ததாகக் கூறி பணத்தை வாங்கிய கும்பல் அனைவரும் தங்கள் செல்போனைகளை சுவிட்ச் ஆப் செய்ததால் தற்போது பணம் கொடுத்தவர்கள் விழி பிதுங்கி காத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கூறிய பாதிக்கப்பட்ட நபர்கள், “அப்போதைய மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பெயரை சொல்லி அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகிகளான கோவையைச் சேர்ந்த பிரேம், அருண், சத்தியமூர்த்தி போன்ற சிலர் எங்களிடம் பணம் வாங்கினர்” என்று கூறியுள்ளனர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த அருள் பாஸ்கர், சேலத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன், சிவக்குமார், ஜெயக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோரது நம்பிக்கையின் பெயரில் பணத்தை கொடுத்ததாக கூறும் பாதிக்கப்பட்ட நபர்கள், இதுவரை தங்களுக்கு டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அனுமதியும் கிடைக்கவில்லை. தாங்கள் கட்டிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் இந்த விஷயம் டாஸ்மாக் மண்டல மேலாளருக்கும் தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து, ஓமலூர் பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன் கூறும் போது, “எங்கள் பகுதியில் பார் நடத்திக் கொள்ள 8 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு கடை நடத்த சொன்னார்கள். அனுமதி கிடைக்கும் என்ற பேரில் பார் நாங்களும் நடத்தினோம். ஆனால் திடீரென முறைகேடாக பார் நடத்துவதாக கூறி என்னுடைய பார் மூடப்பட்டது. இதே போல் தான் சேலத்தில் உள்ள 16 பேரின் நிலைமை.
நாங்கள் 17 பேரும் பல லட்சங்களை இழந்து தற்போது தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு பணத்தை பெற்று தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். பார் நடத்துவதற்கு 8 லட்சத்து ஐம்பதாயிரம் முதல் 10 லட்ச ரூபாய் வரை ஒவ்வொரு டாஸ்மாக் பார்களுக்கும் பணம் பெற்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிலும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சேகோ ஆலைக்கான அனுமதியை ரத்து செய்க - சேலம் அருகே கிராமமக்கள் உண்ணாவிரதம்