சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் உட்பட உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள், தனியார் நிறுவனம் மூலம் தனிப்பட்ட முறையில் லாபம் ஈட்டும் நோக்கத்தில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனிடையே ஜெகநாதன் பல்கலைக்கழகத்தில் ஊழல் மற்றும் முறைகேடு செய்வதாகவும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில சட்ட ஆலோசகர் இளங்கோவனை சாதி ரீதியாக விமர்சனம் செய்ததாகவும், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் துணைவேந்தர் ஜெகநாதனை குற்றப் புலனாய்வுத்துறை காவலர்கள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற பிணையில் வெளிவந்த ஜெகநாதன், மீண்டும் பல்கலைக்கழக பணிகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஆளுநர் ரவி இன்று (ஜன.11) பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் கலந்தாலோசனை கூட்டத்தில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை; ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
மேலும், புகாருக்கு ஆளாகி கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஆளுநர் ரவி பல்கலைக்கழகத்திற்கு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆளுநர் ரவி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் அதே வேளையில், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஏனெனில், ஜெகநாதன் மீண்டும் பல்கலைக்கழக பணிகளில் ஈடுபட்டு வருவதால் தடயங்கள் ஏதேனும் கலைக்கப்பட்டுள்ளதா? என்று காவல்துறையினர் மொத்தம் ஆறு இடங்களில் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் ஆளுநர் ரவி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவது, மறுபுறம் காவல்துறையினர் இரண்டாவது முறையாக சோதனை நடத்துவது என அந்த வளாகமே மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட தன்பாலின காதலர்கள்.. போலீசார் தீவிர விசாரணை!