சேலம்: சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் கூட்டுறவு கைத்தறி ஜவுளி விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் காந்தி ஆகியோர் இன்று (அக்டோபர் 02) திறந்து வைத்தனர். சேலம் கடை வீதியில் 12,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த நிலையத்தில் தனியார் ஜவுளி நிறுவனங்களுக்கு இணையாக நகரம் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரூபாய் 7 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த சேலம் கோ-ஆப்டெக்ஸ் பட்டு ஜவுளி விற்பனை நிலையம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நட்டத்தை ஈடு செய்து லாபத்தில் இயங்கி வருகிறது.
பட்டு என்பது கைத்தறி நெசவால் நெய்யக் கூடிய ரகங்கள் என்பதால் விலை சற்று கூடுதலாக இருக்கும். மாறாகத் தனியார் விற்பனை நிலையங்களில் போலியான பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. போலி பட்டுப் புடவைகளைத் தயாரிப்பவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் போலி பட்டுப்புடவை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதே போலத் தமிழகம் முழுவதும் பட்டுப்புடவை தயாரிக்கப்படும் இடங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் அவ்வப்பொழுது ஆய்வு நடத்தி வருகின்றனர். போலி பட்டுப்புடவை தயாரிப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி ஜவுளி ரகங்களை தாங்களும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அரசு ஊழியர்களிடமும் வர வேண்டும்.
அதே நேரத்தில் கைத்தறி ஜவுளிகளை வாங்க அரசு ஊழியர்களை வற்புறுத்தக் கூடாது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் கைத்தறி துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டுள்ளது. சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையம் சேலம் மாவட்டத்தில் உள்ள பல முன்னணி தனியார் துணிக்கடைகளைப் போலப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இது நிச்சயம் வாடிக்கையாளர்களைக் கவரும். இங்குத் தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நவீனம் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களைக் கொண்ட கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட காஞ்சிபுரம், ஆரணி , திருபுவனம், சேலம் பட்டுச் சேலைகள், கோரப்பட்டுச் சேலைகள் என பல்வேறு வகையான ஆடை வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல வீட்டு உபயோக துணி ரகங்கள், ஜமக்காளங்கள் திரைச்சீலைகள், தோடர் பழங்குடியின மக்களின் எம்பிராய்டரி துணி தயாரிப்புகள், சுடிதார் மெட்டீரியல்கள், ரெடிமேடு சட்டைகள் மற்றும் கைப்பைகள் என ஏராளமான ரகங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இலக்கு 12 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை; நெல்லையில் இளைஞர் வெறிச்செயல்