சேலம்: மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, மகாசபைக் கூட்டம் ஆகியவை சேலத்தில் பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில், மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவராக தனராஜும், செயலராக குமாரும், பொருளாளராக செந்தில் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர்களும், பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்தக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது ”டீசல் விலை கடுமையாக வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் இதனால் டீசலை அதிகமாகப் பயன்படுத்தும் லாரி ஓட்டுநர் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் வரிகளால் தான் டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது. எனவே டீசல் மீதான வரியைக் குறைத்து அதன் மூலம் டீசல் விலையைக் குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
மேலும், ”மத்திய அரசு 'ஸ்கிராபிங் பாலிசி' மூலம் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழித்து விடபோவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல லட்சக்கணக்கான லாரிகளைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, காலாவதிக்கான காலம் 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக உயர்த்தி கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விரைவில் போராட்டம்
பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய குமாரசாமி, ”நாள்தோறும் உயர்ந்து வரும் டீசல் விலையால், லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாரி தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே, டீசல் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
சரக்குப் போக்குவரத்திலும் கார்ப்பரேட்டுகளை நுழைக்கவே ஒன்றிய அரசு டீசல் விலையை உயர்த்தி சிறு லாரி உரிமையாளர்களை நசுக்குகிறது. டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி லாரி தொழிலை ஒன்றிய அரசு முற்றிலும் முடக்கிவிட்டது. எனவே, இதனைக் கண்டித்து விரைவில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றை அணுகி அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தப்படும் ”என்றார்.
இதையும் படிங்க: சுகாதாரத்துறைக்கு அடுத்த 2 மாதம் சவாலானது - ராதாகிருஷ்ணன்