சேலம்: கரோனா பரவல் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லாரி உரிமையாளர்களுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்திய தளர்வுகளைத் தொடர்ந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.
இருப்பினும் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காததால், லாரி உரிமையாளர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று (அக்.8) சேலத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
டீசல் விலையை குறைக்க நடவடிக்கை?
கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் குமாரசாமி பேசுகையில், “லாரி உரிமையாளர்களின் வருவாய் இழப்பை சமாளிக்கும் நோக்கில் செலவினங்களை குறைக்க ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இனிமேல் ஏற்று, இறக்கு கூலி உள்ளிட்ட அனைத்து விதமான படிகளையும், சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும் என்ற கூலிமாற்ற முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் லாரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்து இல்லாததால் வாடகையை உயர்த்த முடியவில்லை. இந்த கூலி மாற்ற முறை அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த முறையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல டீசல் விலையை குறைக்க முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
இந்த விலை குறைப்பு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழ்நாட்டில் பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் கலப்பட டீசல் புழக்கம் இருந்தால், அதனைத் தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: வரலாறு திரும்பியது.. மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா!