சேலத்தில் பாஜகவின் சிறுபானையினர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்த்யாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, அவர்கள் எதை வாக்குறுதிகளாக கொடுத்தார்களோ அதில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றியுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
அது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நையாண்டியுடன் நாங்கள் அறிவித்தோம் அதை எப்போது குறைப்போம் என்று சொல்லவில்லை என்று கூறினார். திமுக ஆட்சி வந்த பிறகு மூன்று மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது. இதுபோன்ற திமுக ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக தேச விரோத கருத்துக்களை பேசி வருகின்றனர்.
திமுக அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தலித் மக்களை வஞ்சிக்கக்கூடிய மிக மோசமான தலைவர் திருமாவளவன்.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்துவிட்டு தலித் மக்களை மிக கேவலமாக பேசினார்கள். அதற்கு கொஞ்சம்கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் அரசியல் நாகரீகம் என்று சொல்லி மழுப்பலான பதிலை கூறிவிட்டு சென்றவர் திருமாவளவன்.
திருமாவளவன் கட்சிக்கு திமுகவில் எந்த ஒரு மரியாதையும் இல்லை. பட்டியலின மக்களுக்கு திமுகவில் எந்த மரியாதையும் இல்லை என்பதை யோசித்து பார்க்க வேண்டும். தலித் மக்களின் முன்னேற்றத்தை பற்றி அக்கறை இல்லை. வரலாற்றில் மோசமான தலித் தலைவர் என்பது திருமாவளவன்தான்.
தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒருவர் தங்களுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்வதற்காக, அரசினுடைய அடாவடித்தனத்தை பதிவு செய்வதற்காக போராட்டம் நடத்துவது என்பது தார்மீக உரிமை. விரைவில் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக எழுச்சியான போராட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தவுடன் நடத்தப்படும் " என்று தெரிவித்தார்.