தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில், நோய் பாதித்த பெற்றோரின் குழந்தைகள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல துன்பங்களுக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தாய், தந்தையில் ஒருவர் அல்லது இருவருக்கும் நோய்த் தொற்று பாதித்து அவர்கள் மருத்துவமனையில் உள்ள நாள்களில் குழந்தைகள் ஒருவகை பாதுகாப்பில்லாத சூழலில் தவிக்க வேண்டியுள்ளது.
உறவினர்கள் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் ஊரடங்கு காலம் பலவித நெருக்கடிகளை ஏற்படுத்தி, குழந்தைகளின் மனம், உடல் இரண்டையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மாவட்டங்களில்தான் போக்சோ வழக்குகளும் அதிகம் பாய்ந்துள்ளன.
இதுபோன்ற சூழலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்மாநில குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர் ராமராஜிடம் பேசினோம்.
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு, அரசு உதவி பெறும் பதிவுபெற்ற குழந்தைப் பாதுகாப்பு இல்லங்கள் பொது முடக்க காலத்திலும் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் பெற்றோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாலோ பெற்றோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலோ, அவர்களது குழந்தைகளுக்கு போதுமான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லை எனத் தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற உதவிகளுக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவித்தாலும் அந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் உதவி பெறும் குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: EXCLUSIVE: தடுப்பூசி போட்டு ரத்தம் உறையாமல் இருக்க மாத்திரை - மருத்துவர் சங்கத் தலைவர்
கரோனா பேரிடர் காரணமாக நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பெண் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவது போன்ற முயற்சிகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து தகவல் அறியும் பொதுமக்கள் மேற்கண்ட அலுவலகங்களுக்கு தெரிவிக்கலாம்.
இந்த ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு அளவில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது தொடர்வதாக தகவல்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்துவருகிறோம். இணைய வழிக் கல்வி அதிகரித்துள்ள நிலையில் குழந்தைகள் தேவையற்ற இணைய தளங்களைப் பார்க்காமல் இருக்கவும், இணைய சூதாட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகாமல் இருக்கவும் பெற்றோர்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கரோனா பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட பொதுமக்கள் ஒவ்வொருவரும் உதவ வேண்டும். இத்தகைய குற்றங்கள் நடைபெறுவது குறித்த எந்த தகவல் கிடைத்தாலும், உடனடியாக காவல்நிலையத்தில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
தற்போது, வாட்ஸ் அப்பில் குழந்தைகள் விற்பனைக்கு உள்ளதாக போலி தகவல் பகிரப்படுகிறது. அதை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். குழந்தைகளை தத்தெடுக்க சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் நிறைய உள்ளன. அவற்றை பொதுமக்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா 2ஆவது அலையில் நுரையீரல் பாதிப்புகள் எப்படி இருக்கும்?