சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், சேலம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் ரூ. 37 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் 11 ஸ்மார்ட் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
சேலம் டவுன் ரயில் நிலையத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள சுப்பராயன் சாலையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் தார் சாலை அமைக்கும் பணியை, சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் நேற்று ஆய்வு செய்தார்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த சீர்மிகு தார் சாலைகள் பாதசாரிகள் நடக்க தனி நடைபாதை, மழை நீர் வடிகால் வசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசி கேபிள்கள் கொண்டு செல்ல தனி வழி, சிசிடிவி அமைத்திட குழாய் பதிக்கும் வசதிகள், மிதிவண்டி ஓடுதளம், நவீன மின் விளக்குகள் அமைக்க தனி இடம் என்று பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுவருகிறது.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறின்றி பொதுமக்கள் இந்த சாலையில் பயணிக்க வாய்ப்பு அமையும். இந்த தார் சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த ஸ்மார்ட் சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்துவைப்பார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வருகை: இஸ்லாமியர்கள் எதிர்ப்பு