சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் மூன்றாவது தேசிய சித்த மருத்துவ திருநாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் சித்தமருத்துவ மூலிகை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். இதன் பின்னர், சித்த மருத்துவ மூலிகை கண்காட்சியை பார்வையிட்டனர்.
இதன் பின்னர் விழாவில் பேசிய ஆட்சியர் சி.அ. ராமன், "பன்னெடுங்காலமாக மக்களை நோயிலிருந்து காப்பாற்றிவருகிறது நம் சித்த மருத்துவம். சித்த மருத்துவம் சித்தர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சித்தர்களில் தலையாய சித்தராகிய அகத்தியரின் பிறந்தநாளான மார்கழி மாதம் தேசிய சித்த மருத்துவ திருநாளாக 2018ஆம் ஆண்டு முதல் கொண்டாடிவருகிறோம்.
இயற்கையோடு நாம் இணைந்து வாழ்வதை நாம் மறந்து செயற்கையாக வாழ்ந்து வருவதால்தான் பல்வேறு நோய் தாக்கம் ஏற்படுகின்றது. நாம் இயற்கையோடு வாழ்வதை ஏற்று சித்த மருத்துவத்தின் முறைகளை பின்பற்றி உணவு பழக்க வழங்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்தின் பயன்களை மக்கள் பலரும் அடைந்திடும் வகையில் அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும் மேம்பட்ட சித்த மருத்துவ சேவையை அரசு வழங்கிவருகிறது.
சித்த மருத்துவ பிரிவுகளின் மூலமாக கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு 11 வகையான சித்த மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் அனைத்தும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகிறது.
நமது பாரம்பரிய உணவுகளை நாம் மீண்டும் உண்ணத் தொடங்குவதே ஆரோக்கியத்தின் தொடக்கமாக இருக்கும். இதனால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கே பாரம்பரிய உணவு திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.