கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், தவ்பீக், அப்துல் சமீம் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை நீதிமன்றக் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, காவல்துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் . இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வந்து அடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், காவல் துறையினரின் பிடியிலுள்ள இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் தொடர்ந்து வைத்திருக்க இயலாத சூழல் நிலவுவதாக காவல் துறையினர் கருதினர். இதனையடுத்து இருவரும் இன்று 11 மணியளவில் பாளையங்கோட்டையில் இருந்து சேலம் மத்திய சிறைக்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காஷ்மீரைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் மீண்டும் கைது