நரசுஸ் காபி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சேலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மற்றொரு அங்கமான நரசுஸ் சாரதி என்டர்பிரைஸ் நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நரசுஸ் சாரதி எண்டர்பிரைசஸ் நிறுவன மேலாளர்கள் சுபாஷ், பாலாஜி இருவரும் அங்கு பணிபுரியும் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அளித்து வருவதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரியும் சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால், அவரின் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் காவல் துறையினர் அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நரசுஸ் சாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று கோரியும், புகார் பெறாமல் அலைக்கழிக்கும் காவல் துறையைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நரசுஸ் நிறுவனத்தைக் கண்டித்தும், காவல் துறையைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் கோட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.