இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டு முதலமைச்சர் அத்தனை மாவட்டங்களிலும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டத்தை வளர்ந்த மாவட்டமாக மாற்றி வெற்றி கண்டுள்ளார். அவரின் பணிகளை பாராட்ட மனம் இல்லாமல், வேண்டுமென்றே குறைகூறி வருகிறார்கள். அரசு விழாக்களுக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி ஈபிஎஸ் மீது அவப்பெயர் வர வைப்பதற்காக தவறான தகவலை எஸ்.ஆர் பார்த்திபன் பரப்பி வருகிறார்.
சேலம் ஈரடுக்கு பாலம் திறப்பு விழாவிற்கு எந்தவித அழைப்பிதழ்களும் அடிக்கவில்லை. சேலத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களின் அரைகுறை வேலைகளை அதிமுக ஆட்சியில் முழுமையாக முடித்து பாலங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் இதுவரை 2,750 கோடி ரூபாய் நிதி பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சேலம் சீர்மிகு நகரம் திட்டத்திற்காக 948 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதிமுகவில் அனைவருக்கும் கருத்து சொல்லும் உரிமையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அனைவரின் கருத்தையும் அதிமுக பரிசீலிக்கும். கட்சியில் குழப்பம் ஏதும் இல்லை. ஒற்றை, இரட்டை தலைமை பற்றி தலைமைதான் முடிவெடுக்கும். ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி இரண்டுமே சிறந்தது. முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இணை ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசித்து ஓபிஎஸ் சிறப்பாக கட்சியை வழிநடத்துகிறார்” என்றார்.