சேலம்: காலநிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (அக்.19) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் வனப்பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போன்ற பல முயற்சிகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆட்சியர் செ.கார்மேகம் பேசுகையில், “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றதைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்தல், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்காகும்.
சேலம் மாவட்டத்தில் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1,469 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு உள்ளது. இதை 1,728 சதுர கிலோ மீட்டராக உயர்த்த வேண்டும். அந்த வகையில், புதியதாக 258.37 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, அதாவது 63,845 ஏக்கரில் வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் ஓராண்டுக்கு 6,385 ஏக்கரில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் மரங்களை நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆண்டுதோறும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். இதன் மூலம் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: மருந்து கொடுக்காமல் 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை.. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!
குறிப்பாக, அதிக அளவில் பசுமை சார்ந்த ஆற்றல் இயக்கங்களை உருவாக்கிடவும், சூரிய சக்தி ஆற்றல், மரபுசாரா ஆற்றல் போன்றவற்றை உருவாக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க சேலம் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் இதுவரை 238 ஏக்கர் நிலம் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நிலங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் கடைகள்தோறும் சூரிய சக்தி ஆற்றல் கொண்டு வரவும், சேலம் மாவட்டத்தினை பசுமை ஆற்றல் தயாரிக்கும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக உருவாக்கிடும் வகையில், சேலம் மாவட்டத்திற்கான பசுமை வரைவுத் திட்டம் உருவாக்கப்படும்” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, தமிழ்நாடு காலநிலை மாற்றப்பணி உதவித் திட்ட இயக்குநர் மணிஷ் மீனா, உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் மாதவி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்ற மையத் திட்ட அலுவலர் எஸ்.என்.அகமத் இப்ராஹிம், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் இரங்கல் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி!