சேலத்தை தலைமை இடமாக கொண்டு வீட்டுமனை விற்பனை, இயற்கை நெல்லிச் சாறு விற்பனை, பணம் இரட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான தொழில்களை, வின்ஸ்டார் இந்தியா என்ற பெயரில் செய்து வந்தவர் சிவகுமார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் நிலம் வாங்கியவர்கள், முதலீடு செய்தவர்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகுமார் மீது பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில், 2015ஆம் ஆண்டு சிவகுமார் நடத்திவந்த நெல்லிச் சாறு தயாரிக்கும் ஆலையில், அப்போதைய உணவு பாதுகாப்பு துறை அலுவலராக இருந்த அனுராதா ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், இந்த நெல்லிச் சாறில் பல்வேறு கலப்படங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கை விளைவிக்கும் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்தார்.
அப்போது வின்ஸ்டார் உரிமையாளர் சிவகுமார் மற்றும் மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதாவை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் புகார் அளித்தார். இந்தப் புகார் மீதான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சிவகுமார் தலைமறைவானார்.
இந்நிலையில் அவர் சேலம் வருவதாக காவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சேலம் நகர காவலர்கள், அவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். இதனையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின்னர் சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.
சிவகுமார் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், நகர காவல் நிலையத்தில் குவிய தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மணப்பாறையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 5 பேர் கைது