கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், " தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களிடம் கரோனா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் (வறட்டு இருமல், காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல்) இவற்றுள் ஏதேனும் ஒன்று இருப்பின் உடனே அருகில் உள்ள அரசு மற்றும் சுகாதாரத்துறையால் பரிந்துரைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கரோனா காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் மூலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வருவோர், வெளிமாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேவைப்பட்டால் அந்நபர்களை தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பிவைத்து, தொடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்டத்தில் ஆங்காங்கே தனிமைப்படுத்துதலுக்காக பள்ளிகள், கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்துவதற்கான மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரே பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ள நோயாளிகள் தங்கியிருந்த பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தினமும் சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினர் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு பணி, கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்ளிட்ட நோய்த் தடுப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள நபருக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், மருத்துவ சேவைகள் அனைத்தும், இத்துறைகளின் பணியாளர்கள் மூலம் தேவையான பொருள்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை பெற்று அதற்கான தொகையினை பெற்று வாங்கி வழங்குதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 694 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான சளித் தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 737 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு, சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு 3 ஆயிரத்து 973 நபர்கள் பூரணகுணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தற்போது ஆயிரத்து 694 நபர்கள் இந்நோய் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதர பல்வேறு நோய் தொற்றுகள் இருந்ததன் காரணமாக 70 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதைத் தவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்தில் இந்நோய் தொற்றிற்கான சிகிச்சை பெற்று வந்த 330 நபர்களில் ஆகஸ்ட் 15 வரை 325 நபர்கள் பூரணகுணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மீதமுள்ள 5 நபர்கள் இந்நோய் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் நாள்தோறும் தொடர்ந்து குறைந்தபட்சம் 5 முறை கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தகுந்த இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள், ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
தனியார் நிறுவனங்கள், வணிக அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வரக்கூடிய அறை, கடை, அலுவலகம் போன்றவற்றினை சரியாக கிருமிநாசினி கொண்டு, மணிக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கும் கருவியின் மூலம் சுத்தம் செய்யாத நிறுவனங்கள் மீது அபராதம் வசூலிக்கப்படும். இதற்காக மாநகராட்சி, ஊரகப் பகுதி சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த் துறை, காவல் துறை ஆய்வாளர்கள் ஆகியோர் கண்காணிக்கப்பட்டு, அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் ஏதேனும் தகவல் பெற எண்ணினால் உதவி மையம் - 104, 1077
மாநகராட்சி கட்டுப்பாட்டு எண்: 0427-2212844
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
சேலம் - 0427-2450023, 2450022 என்ற எண்களுக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.