டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நாடெங்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் அனைத்து மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து செல்லுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து சேலம் ஜங்சன் பகுதியிலும், ரயில் நிலையத்திலும் நேற்று மாலை காவல்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீஸ் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
சேலத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகளிடம் காவல்துறையினர் பைகள் மற்றும் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டனர். மேலும் சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இதே போன்று மதுரை ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு பயணிகளும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மதுரை ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் தண்டவாளங்களிலும், ரயில் பாதைகளிலும் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் 900 காவல்துறையினர் அம்மாவட்ட எல்லைகளான தொப்பூர், காரிமங்கலம், திப்பம்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர கடலூர் முதுநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் பொது மக்களின் உடைமைகளை மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்தனர்.