சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தை முறையாக அளிக்காமல் கொள்ளை அடிப்பதாகவும், பெண் ஊழியர்களுக்கு பணியின்போது தொந்தரவு அளிப்பதாகவும் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணிகள் மற்றும் காவல் பணிகளை மேற்கொள்ள மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கிரிஸ்டல் என்ற நிறுவனம் அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் கீழ் சேலம் அரசு மருத்துவனையில் 447 பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், தமிழக மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் பெண் ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (அக்.14) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்கள் பற்றாக்குறையும் பணிச்சுமையும்: அப்போது செய்தியாளர்களிடையே பேசிய தமிழக மருத்துவமனை தூய்மைப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்செல்வி, 'சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணிகளுக்கு பணியமர்த்தப்பட்ட பணியாளர்களில் 40% பேர் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீட்டு வேலை செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றனர். இதனால், மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதுடன் பணிச்சுமையும் அதிகரிக்கிறது.
தொந்தரவு தரும் மேலாளர்; கண்டுகொள்ளாத மருத்துவமனை முதல்வர்: அரசு நிர்ணயம் செய்த சம்பளம் இந்த பணியாளர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. மாறாக, இந்த பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக இதன் மேலாளர் சின்னசாமி பறித்துக்கொள்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பினால் அந்த பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்வதும், சில பெண் பணியாளர்களை துன்புறுத்தல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.
ஒப்பந்த பணிக்கு ரூ.50 லஞ்சம்: மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க சென்றால் இந்த பிரச்சனைக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை மறுப்பதாக கூறி இந்த தனியார் நிறுவனத்தின் ஊழலுக்கு துணையாக நிற்கின்றனர். மேலும், ஒப்பந்தப் பணிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால்தான், பணியில் சேரமுடியும் என்ற நிலை உள்ளது. எங்களது சங்கம் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்துடன் இணைப்பு பெற்ற சங்கம். ஆனால், பெண் பணியாளர்களின் பிரச்சனைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தை சந்திக்க காவல்துறையினரும் இடையூறாக இருக்கின்றனர்' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் வழங்கவில்லை.. ஊராட்சி மன்றத் தலைவர்களை கண்டித்து மக்கள் குற்றச்சாட்டு!