சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே தளவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த நிர்மலா(52), கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்துள்ளார்.
அப்போது, சேலம் சிபிசிஐடி காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வரும் பொங்காலி என்பவரும், காலி மனையை வாங்கியுள்ளார். அவரின் மனைக்கு அருகில் பொது வழித்தடம் உள்ளது. அதனை ஆக்கிரமித்துக் கொண்டு பொதுமக்கள் யாரும் இவ்வழியாக வரக்கூடாது என்று தகராறு செய்துள்ளார்.
இதுதொடர்பாக நிர்மலா பொங்காலியிடம் கேள்வி கேட்ட போது, தகாத வார்த்தைகளால் அவரை திட்டி அடித்து உதைத்துள்ளார். இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு பைப், உருட்டுக் கட்டைகள் கொண்டு, நிர்மலாவின் இடுப்புக்குக் கீழே அடித்து கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார். பலத்த காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று தனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நியாயம் கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண் என்றும் பார்க்காமல் சிபிசிஐடி காவலர் பொங்காலி, என்னை அடித்துக் காயப்படுத்தினார். எனக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெட்டுக் காயங்களுடன் உடல் மீட்பு- காவல்துறை விசாரணை!