தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிப் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தரமற்ற பேருந்துகள், அனுபவமில்லாத ஓட்டுநர்கள், அவசரமாக இயங்கும் பேருந்துகள் என பல்வேறு பிரச்னைகளை பள்ளி நிர்வாகம் சீர் செய்ய தவறி விடுகிறது. இதை சரிசெய்வதற்காக ஆண்டு தோறும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று சேலம் ஜவகர் திடலில் கோட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில், இந்த வருடத்திற்கான ஆய்வு நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 91 தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட பேருந்துகளின் தரம், அவசரகால வழிக்கதவுகள், பேருந்தின் நிலை, ஆகியவை குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 128 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.