சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சந்திரன் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவர், ஜவுளி வியாபாரம், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், ரவி கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை ரவிகிருஷ்ணன் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது தமிழ்ச்செல்வி வீட்டில் இல்லை.
மேலும், குளியலறையில் ரத்தக்கறையுடன் சுவற்றில் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்றும் விமல், ஹரி என்ற இருபெயர்களும் எழுதப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரவி, அக்கம் பக்கத்தினரிடமும் தனது தந்தைக்கும் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த ஹரி கிருஷ்ணன், கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார்.
தகவலறிந்து உதவிகமிஷனர் ஆனந்தக்குமார் தலைமையில் வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்ததால் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு அவரின் சடலத்தை அருகில் ஏங்கேனும் வீசியிருக்கலாம் என கருதி அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்குச் சென்று பார்த்தனர்.
ஆனால் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர், ஹரிகிருஷ்ணனுக்கு விமல் என்ற நண்பர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த காவலர்துறையினர் ஹரிகிருஷ்ணன், விமல் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைத்து உள்ளார் .