சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் சூரியகாந்த். இவரின் மனைவி காயத்ரி (25). இவர்களுக்கு யாஷினி என்ற 5 வயது மகளும் முகில் வேந்தன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சூரியகாந்த் கூலி வேலை செய்து வருகிறார்.
இன்று அவர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த காயத்ரி தங்களது வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் காயத்ரியின் மாமனார், குளியலறை கதவை தட்டியுள்ளார்.
ஆனால், கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, காயத்ரி குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததோடு ஏற்காடு காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ குழுவினர் காயத்ரியின் உடலை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!