சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கியுள்ள புத்தகக் கண்காட்சியை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முக சரவணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் கணேசன் கிளை மேலாளர் சத்தியசீலன், ஏ.ஐ.டி.யூ.சி., விமலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புத்தகக் கண்காட்சி குறித்து நியூ செஞ்சுரி மண்டல மேலாளர் கணேசன் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் 34 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி தேசிய புத்தக திருவிழாவையொட்டி நடத்தப்படுகிறது. இதில் பொன்விழா கண்ட மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா உள்ளிட்ட முன்னணி பதிப்பகம், புத்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் வெளியீடுகள் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்கள் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு தள்ளுபடியுடன் வாசகர்கள் எங்கள் நிறுவனத்தின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.