புதுடெல்லி: நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பது என ஆளும் பாஜக, எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள அதானி குழுமத்தின் மீதான வழக்கு, மணிப்பூர் கலவரம், உ.பி வன்முறை உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், இந்த கோரிக்கையை மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் இருவருமே ஏற்கவில்லை. அதே நேரத்தில் எதிர்கட்சிகளின் பிடிவாதப்போக்கும் தொடர்ந்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் தொடர்ந்து பாதிக்கப்ப்டடன.
இந்த நிலையில், மக்களவையின் அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆளும் பாஜக தரப்பிலும், எதிர்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் தரப்பிலும் செவ்வாய்கிழமை முதல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான கூட்டத்தின் போது இந்தியா கூட்டணி கட்சிகள், அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75ஆவது ஆண்டை முன்னிட்டு அரசியல் சட்டம் குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "அடுத்த இரு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - டெல்டா வெதர்மேன் தகவல்!
இதையடுத்து அரசியல் சட்டம் குறித்து வரும் 13, 14ஆம் தேதிகளில் மக்களவையிலும், 16,17ஆம் தேதிகளில் மாநிலங்களவையிலும் விவாதம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு, "நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய்கிழமை முதல் சுமுகமாக நடைபெறும்," என்று நம்பிக்கை தெரிவி்ததார்.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் முக்கியம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் இருதரப்புக்கும் இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. குறிப்பாக அதானி வழக்கு விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிது. விலைவாசி உயர்வு, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என பிற எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.