சேலம், பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த மணி (65), கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பூபாலன் மற்றும் பிரபாகரன் என்ற மகன்களும், லதா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், மணிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக மணிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மணி தொடர்ந்து மதுகுடித்து வந்தார். இதனிடையே, நேற்றுமுன்தினம் இரவு, மணி வீட்டிற்கு வந்தபோது அவரது குடும்பத்தினர் மணியை கண்டித்ததாக தெரிகிறது. பிறகு மணியிடம் "இனி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரவேண்டாம்" என தெரிவித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.
இதில், மனமுடைந்த மணி, சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள ரயில்வே கேட் பகுதிக்கு வந்து இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சேலம் அம்மாப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், இதுகுறித்து சேலம் ஜங்ஷன் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பெயரில் ஆய்வாளர் இளவரசி தலைமையில் காவலர்கள் மணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.