சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவி காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, காலை பள்ளி வணக்க கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக சேலம் மேச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை விவகாரத்தில் பள்ளிக் கட்டடத்திலிருந்து மாணவி குதித்ததாகத் தெரிய வந்துள்ளது. மேலும் சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் வந்து மாணவியின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்தார். அதேநேரம் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பாக காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “பள்ளி மாணவியிடம் முழுமையாக விசாரிக்கப்பட்டது. குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் காரணமாக தற்கொலைக்கு முயலவில்லை. எனவே, அவர்களுக்கு எதிலும் தொடர்பு இல்லை என மாணவி கூறியுள்ளார்.
சிறுமிக்கு கால்முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். இது தொடர்பாக மாணவிக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மறுபிரேதப்பரிசோதனை உத்தரவை நிறுத்தி வைக்கமுடியாது - நீதிபதி