சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யும் வேர்க்கடலையை, சேலம் மாநகரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக 60 கிலோ எடைகொண்ட மூட்டை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இன்று திடீரென ஒரு மூட்டை வேர்கடலை ஆயிரத்து 500 ரூபாய்க்குள் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேர்க்கடலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் வியாபாரிகளுடன், கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை குறைப்பதாகவும் குற்றம்சாட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது, உரிய நேரத்தில் மழை பெய்யாததால் வேர்க்கடலை உற்பத்தி குறைந்துள்ளது. 60 கிலோ மூட்டைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கிடைத்தால்தான் எங்களுக்கான லாபம் கிடைக்கும். ஆனால் கூட்டுறவு அலுவலர்கள் ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறைவாக விலை நிர்ணயிப்பதாகவும், இது வெளி சந்தையை விட குறைவான விலை என்றும் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியைப் போல் மாறிய ஈராக் - அரசுக்கு எதிரான போராட்டத்தில் 20 பேர் உயிரிழப்பு!