சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது நான்கு ரோடு. இங்கு உள்ள பெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்துவருகிறார். இவர் நேற்று இரவு அவரது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் எழுந்த சக்தி வீட்டுக்குள் திருடன் ஒருவன் கத்தியுடன் நின்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவர் "திருடன்" "திருடன்" என சத்தமிட்டபடி திருடனைப் பிடிக்க முயன்றார். ஆனால், திருடன் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு வீட்டுக்குள் இருந்து தப்பி ரோட்டுக்கு வந்து தப்பியோடினார்.
சக்தியும், அருகில் இருந்த பொதுமக்களும், திருடனைத் விடாமல் துரத்திச் சென்றனர். பல சந்துகளில் புகுந்து தப்பியோடிய திருடன் பள்ளம் ஒன்றில் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் திருடனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்தனர். பிறகு திருடனை பொதுமக்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை செய்தனர். அதில், திருடனின் பெயர் சின்னராஜ் என்றும், சேலம் மாவட்டம் நீர் முள்ளி கொட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சக்தியின் வீட்டில் நள்ளிரவில் திருட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.
திருடன் சின்னராஜின் கை, கால்களில் முறிவு ஏற்பட்டிருந்ததால் பள்ளப்பட்டி காவல் துறையினர் திருடன் சின்னராஜாவை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.