சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் அர்ஜுனன், கடந்த வாரம் ஓமலூர் அருகே உள்ள அவரது விவசாய தோட்டத்திற்குச் சென்று விட்டு தனது காரில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பூர் சுங்கச்சாவடி அருகே அர்ஜுனன் காரை சோதனையிட்ட காவல் துறையினர், அவரிடம் இ-பாஸ், அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.
இதனால் அர்ஜுனன் கோபமடைந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். பின்னர் காவல் துறையினரை எட்டி உதைத்த அர்ஜுனன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை கருப்பூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் மீது, தகாத வார்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட இரண்டு பிரிவில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவலர்கள் அவரைத் தேடிவந்தனர். இந்த நிலையில் அர்ஜுனன் தனது வழக்கறிஞர் மூலம் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, முன்பிணை மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி குமரகுரு ரூ. 20 ஆயிரம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டுமென்றும், மறு உத்தரவு வரும்வரை கருப்பூர் காவல்நிலையத்தில் தினமும் காலையில் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: செயல்பாட்டில் உள்ள இணையதளங்களை நெறிப்படுத்த வேண்டும் - திருமாவளவன்