கரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு உதவி மையங்களை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டு பொது போக்குவரத்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. aதனடிப்படையில் சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அம்மாபேட்டை மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழைய பேருந்து நிலையம் ஆகிய வளாகங்களில் கரோனா தொற்றுநோய் தடுப்பு உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பேருந்து நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை முழுமையாக கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ளவும், அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து நிலையங்களில் எச்சில் துப்பக்கூடாது, மது, பான்மசாலா, குட்கா, புகையிலை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது, ஐந்து நபர்களுக்கு மேல் கூட்டமாக சேரக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது .
தளர்வின்போது, பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்“ என்றார்.