தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சேலம் அஸ்தம்பட்டியில் நிதி சார் கல்வி - கடன் இணைப்பு குறித்து வங்கியாளர்களுக்கான புரிந்துணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் இயக்குநர் அருள்ஜோதி அரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் 18 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.79.39 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 320 மகளிர் சுய உதவிக் குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு வங்கியாளர்கள் கடன் உதவியை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் எனவும், கிராமப்புற பகுதி மக்கள் வேலைவாய்ப்பை தேடி நகருக்கு வருவதை தவிர்த்து கிராமத்தை நகரமயமாக்க கிராமப்பகுதியில் பலர் தொழில் தொடங்க வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் அதிகளவில் புகார்கள் வருகின்றன. எனவே பயனாளிகளுக்கு உரிய மானியத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!