தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மீண்டும் இன்று(ஆகஸ்ட்.1) முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், இந்த மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், சேலம் மாவட்டத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற்குள் வரும்போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி இ- பாஸ் பெற வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலைத் தடுக்க இயலாது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றுவதோடு, தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று எச்சரித்துள்ளார்.